×

ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது

திருவள்ளூர்: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். நாடு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்பேரில் திருவள்ளூர் உழவர் சந்தை எதிரே சாலை மறியல் நடைபெற்றது. ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமதாஸ், ஐஎன்டியுசி நிர்வாகி பன்னீர்செல்வம், ஏஐடியுசி மாவட்ட தலைவர் கஜேந்திரன், சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அப்போது, திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்தல், விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்தல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு சங்கங்களைச் சேர்ந்தோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புழல்: செங்குன்றம் சோழவரம் சுற்று வட்டார விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என பல்வேறு அமைப்புகள் சார்பில் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை நேதாஜி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று அருகில் உள்ள சென்னை தொலைபேசி அலுவலகம் முன்பு வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இடது தொழிற்சங்க மையத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். இதில், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மயில்வாகனன், பிரதாப் சந்திரன், நடேசன், எல்லையன், கோதண்டம் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் அலுவலகம் முன்பு மரியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செங்குன்றம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது appeared first on Dinakaran.

Tags : Union Government ,Thiruvallur ,central government ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...